வானிலையை துல்லியமாக கணிக்க உதவும் இன்சாட்-3 டி.ஆர். செயற்கைகோள் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோ தலைவர் தகவல்

வானிலையை துல்லியமாக கணிக்க உதவும் இன்சாட்-3 டி.ஆர். செயற்கைகோள் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோ தலைவர் தகவல்
வானிலையை துல்லியமாக கணிக்க உதவும் இன்சாட்-3 டி.ஆர். செயற்கைகோள் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்தார்.சென்னை எம்.ஐ.டி. நிறுவனத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பெங்களூருவில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு விமானம் மூலம் இஸ்ரோ தலைவர் கிரண்குமார் வந்தார்.

விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்சாட்-3 டி.ஆர்.

வானிலை ஆராய்ச்சி, வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் ஆகியவற்றை துல்லியமாக கணிப்பதற்காக இன்சாட்-3 டி.ஆர். என்னும் செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2 ராக்கெட் மூலம் அடுத்த மாதம்(ஆகஸ்டு) விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஆயத்த பணிகளையும் திட்டமிட்டு செய்து வருகிறோம்.

இதேபோல் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் மேலும் பல செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. இவற்றின் மூலம் கடல் ஆராய்ச்சி, கடலின் ஆழம், கடலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், சுனாமி போன்ற பேரழிவுகளை முன்கூட்டியே கண்காணிக்க முடியும்.இஸ்ரோ மூலம் ஏற்கனவே விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைகோள்கள் இலக்கை அடைந்து திட்டமிட்ட சுற்றுப்பாதையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

அதிக எடை செயற்கைகோள்

இதைத்தொடர்ந்து எம்.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், தற்போது "இஸ்ரோ ஆண்டுக்கு 6 முதல் 8 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதை 12-ல் இருந்து 18 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.நிகழ்ச்சியில் பங்கேற்ற விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனர் கே.சிவன் கூறும்போது, "தகவல் தொடர்புக்காக 3,200 கிலோ எடை கொண்ட ஜிசாட் 19 என்னும் செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் இந்த ஆண்டின் இறுதியில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்படும். இந்திய ராக்கெட் ஒன்றின் மூலம் ஏவப்படும் அதிக எடை கொண்ட செயற்கைகோள் இதுவாகும்" என்றார்.Comments