24-வது ஒலிம்பிக் 1988, சியோல் பங்கேற்ற நாடு-159, வீரர்கள்-6,197, வீராங்கனைகள்-2,194, விளையாட்டு-23

24-வது ஒலிம்பிக் 1988, சியோல் பங்கேற்ற நாடு-159, வீரர்கள்-6,197, வீராங்கனைகள்-2,194, விளையாட்டு-23
டோக்கியோ ஒலிம்பிக்குக்கு (1964-ம் ஆண்டு) பிறகு, ஆசியாவில் 2-வது முறையாக ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பை தென்கொரிய தலைநகர் சியோல் பெற்றது. இந்த ஒலிம்பிக்கை இணைந்து நடத்த வடகொரியா முயற்சித்தது. ஆனால் அவர்களின் சில கோரிக்கைகள் ஏற்புடையதாக இல்லை என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கைவிரித்தது. இதையடுத்து தென்கொரியாவுடன் நீண்ட கால பகைமை கொண்டுள்ள வடகொரியா, சியோல் ஒலிம்பிக்குக்கு வீரர்களை அனுப்ப மறுத்து விட்டது. வடகொரியாவுக்கு ஆதரவாக கியூபா, எத்தியோப்பியாவும் ஒலிம்பிக்கை புறக்கணித்தது. அதே சமயம் முந்தைய ஒலிம்பிக்கில் விலகியிருந்த சோவியத் யூனியனும், கிழக்கு ஜெர்மனியும் ஆர்வமாக பங்கெடுத்தன.23 விளையாட்டுகளில் 237 பந்தயங்கள் இடம் பெற்றன. ஒலிம்பிக் ஏற்பாடு மற்றும் உதவும் பணிகளில் 27,221 தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர். அத்துடன் செய்தி சேகரிக்க, ஒளிபரப்பு செய்ய 11,331 ஊடகத்தினர் சியோல் நகரில் குவிந்தனர். இதனால் இந்த ஒலிம்பிக் பற்றிய செய்திகள் உலகம் முழுவதும் எளிதில் சென்றடைந்தது.
இனி இந்த ஒலிம்பிக்கில் அரங்கேறிய சாதனை மற்றும் சுவாரஸ்யமான விஷயங்கள் வருமாறு:-
கருகிய புறாக்கள்: தொடக்க விழாவில், அமைதியை வலியுறுத்தும் வகையில் புறாக்களை பறக்க விடுவது வழக்கம். இந்த ஒலிம்பிக் தொடக்க விழாவின்போது, ஒலிம்பிக் தீபம் எரிந்து கொண்டிருந்த மெகா கொப்பரை தீயில் சிக்கி நிறைய புறாக்கள் கருகி இறந்தன. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அடுத்த ஒலிம்பிக்கில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாகவே புறாக்கள் பறக்கவிடப்பட்டன.
* டேபிள் டென்னிஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் சீனா, தென்கொரியா பட்டத்தை வென்றன.
* சுவீடன் வாள்சண்டை வீராங்கனை கெர்ஸ்டின் பால்ம், 7 ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் ஆனார்.
ஸ்டெபி கிராப் ஜாலம்: 64 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் டென்னிஸ் மீண்டும் சேர்க்கப்பட்டது. இதன் பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் மேற்கு ஜெர்மனியின் 'அழகு புயல்' ஸ்டெபி கிராப் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கேப்ரிலா சபாடினியை (அர்ஜென்டினா) வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கபளகரம் செய்தார். இந்த சீசனில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் ஏற்கனவே கைப்பற்றிய ஸ்டெபி கிராப்புக்கு ஒலிம்பிக் மகுடமும் கிடைத்ததால், அவருக்கு இது 'கோல்டன் ஸ்லாம்' என்ற மறக்க முடியாத, தித்திப்பான ஆண்டாக அமைந்தது.மின்னல்வேக பெண்மணியின் பரிதாபம்: பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 4ஜ்100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் அமெரிக்க வீராங்கனை புளோரென்ஸ் கிரிபித் ஜோய்னெர் தங்க மங்கையாக முத்திரை பதித்தார். உலகின் மின்னல்வேக பெண்களில் ஒருவராக வலம் வந்த கிரிபித் ஜோய்னெர், தனது 38-வது வயதில் தூக்கத்திலேயே அகால மரணம் அடைந்தார். மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இவர் மீது அடிக்கடி ஊக்கமருந்து சர்ச்சைகளும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.தங்க மீன்கள்: அமெரிக்க நீச்சல் வீரர் மேட் பியான்டி 5 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என்று மொத்தம் 7 பதக்கங்களை அள்ளி அசத்தினார். இதில் 3 உலக சாதனைகளும் அடங்கும். இதே போல் கிழக்கு ஜெர்மனி நீச்சல் வீராங்கனை கிறிஸ்டின் ஓட்டோவும் தங்கத்தில் குளித்தார். அவரது பெயருடன் 6 தங்கப்பதக்கம் ஒட்டிக்கொண்டன. ஒரு ஒலிம்பிக்கில் 6 தங்கத்தை சுவைத்த முதல் வீராங்கனை என்ற சிறப்பு கிறிஸ்டின் ஓட்டோவுக்கு கிடைத்தது. ஓய்வுக்கு பிறகு அவர் தற்போது ஜெர்மனி டெலிவிஷனில் விளையாட்டு நிருபராக பணியாற்றி வருகிறார்.
* குதிரையேற்ற பந்தயத்தில் 'டிரஸ்சாஜ்' தனிநபர் பிரிவில் இரு பாலரும் கலந்து கொள்வது உண்டு. இந்த முறை இப்பிரிவில் முதல்முறையாக மூன்று பதக்கத்தையும் பெண்களே தட்டிச்சென்றனர்.
* ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் பல்கேரியாவின் பளுதூக்கும் வீரர்கள் மிட்கோ கிராப்னெவ், குயன்செவ் ஆகியோரின் தங்கப்பதக்கங்கள் பறிக்கப்பட்டன.
தகுதி நீக்கப்பட்ட சாதனை வீரர்: 100 மீட்டர் ஓட்டத்தில் கனடா வீரர் பென் ஜான்சன், அமெரிக்க அதிவேக மனிதர் கார்ல் லீவிசை தோற்கடித்து முதலிடத்தை பிடித்தார். 9.79 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனை படைத்த பென் ஜான்சன், ஊக்கமருந்து பயன்படுத்தியது அடுத்த 2 நாட்களில் தெரியவந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது உலக சாதனையும் அழிக்கப்பட்டது. 2-வதாக வந்த கார்ல் லீவிஸ் (9.92 வினாடி) மீண்டும் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். நீளம் தாண்டுதலிலும் கார்ல் லீவிஸ் தங்கப்பதக்கத்தை தக்க வைத்துக் கொண்டார்.
* கிழக்கு ஜெர்மனி வீராங்கனை கிறிஸ்டா லுட்டிங் ரோதன்பர்ஜெர் சைக்கிள் பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். இதே ஆண்டில் 6 மாதங்களுக்கு முன்பு கனடாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் ஸ்கேட்டிங் விளையாட்டில் 2 பதக்கத்தை கிறிஸ்டா வென்றிருந்தார். இதன் மூலம் ஒரே ஆண்டில் கோடை கால ஒலிம்பிக், குளிர்கால ஒலிம்பிக் இரண்டிலும் பதக்கம் வென்ற ஒரே நபர் என்ற அபூர்வ வரலாற்று சாதனைக்கு அவர் சொந்தக்காரர் ஆனார்.
* கால்பந்து போட்டியில் சோவியத் யூனியன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்தியாவுக்கு வெற்றிடம்: கடந்த ஒலிம்பிக்கை போன்றே இந்த ஒலிம்பிக் பதக்கப்பட்டியலிலும் இந்தியாவுக்கு வெற்றிடமாகவே இருந்தது. 12 அணிகள் இடையிலான ஆண்களுக்கான ஆக்கியில் அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்த இந்திய அணி 5,6-வது இடத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்று 6-வது இடமே பிடிக்க முடிந்தது. டென்னிசில் ஆண்கள் ஒற்றையரில் ஆடிய இந்திய வீரர்கள் விஜய் அமிர்தராஜ், ஷீசன் அலி இருவரும் முதல் சுற்றை தாண்டவில்லை.இரண்டு வார கால ஒலிம்பிக் திருவிழா முடிவில் சோவியத் யூனியன் 55 தங்கம், 31 வெள்ளி, 46 வெண்கலம் என்று 132 பதக்கங்களுடன் முதலிடத்தையும், கிழக்கு ஜெர்மனி 37 தங்கம், 35 வெள்ளி, 30 வெண்கலம் என 102 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், அமெரிக்கா 36 தங்கம் உள்பட 94 பதக்கத்துடன் 3-வது இடத்தையும் பிடித்தன. உலக விளையாட்டில் கொடிகட்டி பறந்த சோவியத் யூனியனும், கிழக்கு ஜெர்மனியும் இந்த பெயர்களில் பங்கேற்ற கடைசி ஒலிம்பிக் இது தான்.Comments