SPIRITUAL -TN-TAMIL NEWS 3060|திருப்பங்களைத் தரும் திரிவிக்ரம சுவாமி
கோவில் தோற்றம்
தன் தலை மீதே வைக்க வேண்டினான். அதன்படியே பெருமாள் வைக்க பாதாளம் சேர்ந்தான் என்பது இந்தத் தல வரலாறு.ஞானிகளும், நாரதரும், கின்னரர்களும் இத்தலத்தில் தவமி யற்றிய தாகக் கூறப்படுகிறது. மார்க்கண்டேயரின் தந்தையான மிருகண்ட முனிவர், திருமாலின் வாமன அவதாரத்தைக் காண விரும்பித் தவமியற்றிய தலம் இது.திருக்கோவிலூர், திருக்கண்ண புரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக் கண்ண கவித்தலம் என ஐந்து தலங்கள் பஞ்ச ஷேத்திர தலம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் முதன்மையானது திருக்கோவிலூர்.
உலகளந்த பெருமாள்
ஆலயத்தின் நாயகனாக விளங்கும் திரிவிக்ரம சுவாமி களின் பிரமாண்டத் திருக்கோலம் நம் கண்ணுக்கும்,கருத்துக்கும் வியப்பூட்டுகிறது. இவரே உலகளந்தப் பெருமாள் என அழைக்கப்படுகின்றார். வலது காலை உயரத் தூக்கி,இடது திருவடியில் நின்று புன்னகையுடன் சேவை சாதிக்கின்றார். வலது கையில் சங்கு, இடது கையில் சக்கரம் ஏந்தி ஞானத்தை அருள்கின்றார். (பொதுவாக வலது கரத்தில் சக்கரம், இடது கரத்தில் சங்கு இருப்பது வழக்கம்).ஓரடியால் வானத்தை அளந்தும், மற்றொரு அடியால் பாதாள உலகை அளந்தும், மூன்றாவது அடியை எங்கே வைப்பது என மகாபலியை கேட்கும் விதமாக வலது கையை வைத்துள்ளார். மேலே உள்ள திருவடியை பிரம்மா ஆராதனை செய்ய,கீழே உள்ள திருவடியை லட்சுமி, பிரகலாதன், மகாபலி, நமச்சு மகாராஜா ஆகியோர் பூஜை செய்கின்றனர்.சுக்ராச்சாரியார், மிருகண்டு மகரிஷி, அவரது பத்தினி, முதலாழ்வார்களான பொய்கையாழ்வார்,பூதத்தாழ்வார், பேயாழ்வார், கருடன் ஆகியோர் கருவறையின் வலது பக்கமும், இடது பக்கமும் காட்சி தருகின்றனர்.மூலவரின் திருமேனி 21 அடி உயரம் கொண்ட பழமையான தேவதாருவால் (மரத்தால்) ஆனதாகும். இவருக்கு உலகளந்த பெருமாள், ஆயனார், இடைக்கழி ஆயார் என பல்வேறு திருநாமங்கள் உண்டு. எம்பெருமான் பச்சிலை மூலிகைகளைக் கொண்டு வண்ணம் பூசப்பட்டு பேரழகனாக வீற்றிருக்கிறார்.
நாச்சியார் சன்னிதி
திரிவிக்ரம சுவாமியின் வலதுபுறம் தாயார் பூங்கோவல் நாச்சியார் சன்னிதி அமைந்துள்ளது. இது, கருவறை,அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், சோபன மண்டபம், திருக்கல்யாண மண்டபம் ஆகியவை கொண்டு எழிலோடு தனிக்கோவிலாக அமைந்துள்ளது. மூலவர் பூங்கோவல் நாச்சியார் என்றும், உற்சவர் புஷ்பவல்லித் தாயார் என்றும் அழைக்கப்படுகின்றாள். திரிவிக்ரம சுவாமியை பிரம்மா, இந்திரன், மகாபலி, மிருகண்டு, குஷி, காசியபர் மற்றும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
விழாக்கள்
தமிழ் புத்தாண்டு, ராமநவமி, ராமானுஜர் விழா, வைகாசி வசந்த உற்சவம், ஆனியில் திருமாலுக்கு ஜேஷ்டாபிஷேகம்,ஆடியில் பத்து நாட்கள் ஆண்டாள் பூர விழா, ஆடி வெள்ளி, கடைசி வெள்ளி தாயாருக்கும், பெருமாளுக்கும் புஷ்பங்கி சேவை, ஆவணியில் வேணுகோபாலருக்கு 10 நாட்கள் விழா, வாமன ஜெயந்தி மூன்று நாட்கள், புரட்டாசி பவித்ர உற்சவம், தாயாருக்கு நவராத்திரி விழா, திருமாலுக்கு தினப்படி திருமஞ்சனம், ஐப்பசி திருவோணத்தன்று முதலாழ்வார் களுக்கு 5 நாள் விழா, மணவாள மாமுனிகள் பத்து நாள் உற்சவம், கார்த்திகை தீப உற்சவம் மூன்று நாள், கைசீக ஏகாதசி, மார்கழியில் பகல் பத்து, வைகுண்ட ஏகாதசி, இராப்பத்து, தைத் திருநாள், மாசியில் மகம், பங்குனி பிரம்மோற்சவம் என விழாக்களுக்கு பஞ்சமில்லாத் திருக்கோவிலாகத் திகழ்கின்றது.காலை 5.30 மணி முதல் 6.45மணி வரை, 8.30மணி முதல் பகல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் 5.45 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம். விழாக் காலங்களில் இது மாறுபடும்.
அமைவிடம்
விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் தென்கரையில் திருக்கோவிலூர் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து தென்மேற்கே 200 கிலோமீட்டர், விழுப்புரத்திற்கு மேற்கே 40 கிலோமீட்டர், திருவண்ணாமலையின் தென்கிழக்கே 40 கிலோமீட்டர், திருவெண்ணெய்நல்லூருக்கு மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.