கச்சா எண்ணெய் உற்பத்தியும் வீழ்ச்சியும்
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியிலும், தளர்ச்சியிலும் பின்னிப் பிணைந்திருக்கும் பெட்ரோலின் மூலப்பொருள் கச்சா எண்ணெய். தொழிற்சாலைகளின் இயக்கத்திலும், தொழில் வளர்ச்சியிலும் பெட்ரோலிய பொருள்கள் பெரும்பங்கு வகிப்பதால், அவற்றின் உற்பத்தி அளவு மற்றும் விலையை உலக நாடுகள் மிகுந்த அக்கறையோடு, உன்னிப்பாகக் கவனிக்கின்றன.விலை ஏற்றங்களும், இறக்கங்களும், எண்ணெய் வள மற்றும் இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரத்தை நேரிடையாகப் பாதிக்கும் என்பதுதான் அந்த அக்கறைக்கு முக்கிய காரணமாகும். ஒவ்வொரு நாட்டின் பணவீக்க காரணி பட்டியலில், பெட்ரோலிய பொருள்களின் விலை முக்கிய பங்கு வகிப்பதால், அது பிரத்தியேக கவனத்துக்கு உள்ளாகிறது.1847-ஆம் ஆண்டில் முதன் முதலாக, கச்சா எண்ணெயில் இருந்து மண்ணெண்ணெய் (கெரசின்) பிரித்தெடுக்கப்படும் முறை கண்டுபிடிக்கப்பட்டு, அந்த நிகழ்வு, பிற பெட்ரோலிய பொருள்களைப் பிரித்தெடுப்பதற்கு வழிகாட்டியாக அமைந்தது. உலக நாடுகளின், ஒரு நாளைய கச்சா எண்ணெய் தேவை சுமார் 100 மில்லியன் பீப்பாய்களாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பில் (OPEC) அங்கம் வகிக்கும் அல்ஜீரியா, அங்கோலா, ஈக்வெடார், ஈரான், இராக், குவைத், லிபியா, நைஜீரியா, கதார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசு, வெனிசூலா ஆகிய நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.இவை தவிர, கச்சா எண்ணெய் உற்பத்தியில், அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், நார்வே ஆகிய நாடுகளின் பங்கும் கணிசமானதாகும். உலக நாடுகளின் மொத்த எண்ணெய் உற்பத்தியில், இந்த நாடுகள் 70 சதவீதப் பங்கு வகிக்கின்றன.பிரிட்டனில் உற்பத்தியாகும் எண்ணெய் Brent crude என்றும், அமெரிக்க கச்சா எண்ணெய் ரபஐ WTI (West Texas Intermediate) என்றும், பெட்ரோலிய உற்பத்திக் கூட்டமைப்பு நாடுகளின் எண்ணெய் OPEC crude என்றும் குறியீடுகள் மூலம் அடையாளம் காணப்படுகின்றன.2008 ஜுன் மாதம், கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 140 டாலர் என்ற உச்சத்தைத் தொட்டு கீழிறங்கியது. 2011-இல் அதன் விலை 100 டாலரைத் தொட்டது. அது 2013-ஆம் ஆண்டில், 110 டாலர் வரை சென்று, ஆண்டின் பெரும்பகுதியை 100 டாலருக்கு அருகிலேயே கழித்தது.இந்த ஆண்டு அக்டோபர் வரை, ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட கச்சா எண்ணெயின் விலை, நவம்பர் முதல் வாரத்திலிருந்து படிப்படியாகக் குறைய ஆரம்பித்து, கடைசி வாரத்தில் 66 டாலராக வீழ்ச்சி அடைந்தது.இந்த விலை வீழ்ச்சி, தாற்காலிகமான ஒன்றுதான் என்று உற்பத்தி நாடுகள் கணித்திருந்த நிலையில், எதிர்பாராமல், விலை வீழ்ச்சி மேலும் தீவிரமடைந்து, டிசம்பர் 19-ஆம் தேதி, அதன் விலை 57 டாலரைத் தொட்டு நின்றது. இது 2005-ஆம் ஆண்டு நிலவிய விலை நிலவரத்துக்கு ஒப்பானதாகும்.கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி, அதை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு ஆறுதலாகவும், உற்பத்தி நாடுகளுக்குப் பொருளாதார இடியாகவும் அமைந்தது எனலாம்.நீண்ட காலமாகக் கூட்டணி அமைத்து (cartel), உற்பத்தியை குறைப்பதன் மூலம் விலை இறக்கத்தைத் தடுத்து வந்த எண்ணெய் வள நாடுகள், தற்போது, அந்த உக்தி பலன் அளிக்காததால், செயலற்று வேடிக்கை பார்க்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன.அமெரிக்காவில் அதிக கச்சா எண்ணெய் உற்பத்தி, ஜப்பான், ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மந்த நிலை போன்ற காரணிகள், தற்போதைய எண்ணெய் விலை வீழ்ச்சியில் பெரும் பங்கு வகிக்க ஆரம்பித்துவிட்டன.ஆசியாவைப் பொறுத்தவரை, சீனப் பொருளாதார ஓட்டத்தின் தேக்க நிலையால், கச்சா எண்ணெயின் தேவை குறையும் என்ற காரணம், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.கச்சா எண்ணெயின் விலை, 60 டாலருக்குக் கீழே சென்றால், உற்பத்தியாளர்களுக்குக் கட்டுப்படியாகாது என்று கணக்கிடப்படுவதால், பல எண்ணெய் உற்பத்தி மையங்கள் மூடப்படும் அபாயமும் காத்து நிற்பதாக நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். வளைகுடா நாடுகள் தங்கள் கவனத்தை மற்ற தொழில்களுக்கு விரிவாக்கம் செய்யவும் (Diversification of Industrial activities) வாய்ப்புகள் உள்ளன.கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று நைஜீரியா. அந்த நாட்டின் 70 சதவீத வருவாய் கச்சா எண்ணெய் உற்பத்தி மூலம் கிடைக்கிறது. ஏற்றுமதியில், 90 சதவீதம் கச்சா எண்ணெயாகும்.நவம்பர் மாதம் திடீர் விலை சரிவால், அந்த நாட்டின் நாணயமான "நைரா'வின் மதிப்பு 10 சதவீதம் அதிரடியாகக் குறைக்கப்பட்டு, வட்டி விகிதம் ஏற்றப்பட்டது. இந்தப் பொருளாதார அதிர்ச்சியிலிருந்து மீள பல ஆண்டுகளாகும் என்று அந்த நாட்டின் மத்திய வங்கி கவலை தெரிவித்துள்ளது.ஏற்கெனவே, உக்ரைன் பிரச்னையால் பொருளாதாரத் தடைகளுக்கு உள்படுத்தப்பட்ட ரஷியாவின் நிலைமை, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் மேலும் மோசமடைந்துள்ளது. ரஷியாவின் மொத்த வருவாயில், 50 சதவீதம், பெட்ரோலிய பொருள்கள் இடம் வகிக்கின்றன.கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால், கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி, ரஷியாவின் நாணயமான ரூபிளின், அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பு 20 சதவீதம் சரிந்தது. வட்டி விகிதம் 10.5 சதவீதத்திலிருந்து, 17.5 சதவீதமாக அதிரடியாக உயர்த்தப்பட்டது. ஒரு நாட்டு நாணயத்தின் மதிப்பு குறைந்தால், சர்வதேச சந்தையில் அதன் வாங்கும் திறன் குறைந்து, அத்தியாவசிய இறக்குமதிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும். நாட்டின் மொத்த தொழில் உற்பத்தி குறைந்து, பணவீக்கம் அதிகமாகும்.கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்த நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கு இந்த விலை வீழ்ச்சி ஓர் ஆறுதலான செய்தியாகும். நாட்டின் 80 சதவீத கச்சா எண்ணெய் தேவையை இந்தியா இறக்குமதி செய்கிறது. கச்சா எண்ணெயை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யும்போது, அதோடு, இலவச இணைப்பாக பண வீக்கமும் இறக்குமதி (Imported inflation) செய்யப்படுகிறது.அன்னியச் செலாவணி, நடப்பு கணக்கில் விரிசல் (Current Account Deficit), அரசு வரவு, செலவின பற்றாக்குறை ஆகிய எதிர்மறை நிகழ்வுகளுக்கு இது முக்கிய காரணமாக அமைகிறது. கடந்த ஜூன் முதல் தற்போது வரை ஏற்பட்டிருக்கும் 40 சதவீத எண்ணெய் விலை வீழ்ச்சி, இந்தப் பிரச்னைகளை ஓரளவு தீர்க்க வல்ல நிகழ்வாகும். கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை விலையில் ஒவ்வொரு டாலர் விலை சரிவும், இந்தியாவிற்கு 40 பில்லியன் ரூபாயை மிச்சப்படுத்தும்.சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைப்பால், கடந்த ஆறு மாதங்களில் ஒன்பது முறை பெட்ரோல் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால், நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. கடந்த நவம்பர் மாத புள்ளி விவரப்படி, நுகர்வோர் பண வீக்கம் (CPI inflation) 4.38 சதவீத அளவுக்கு சரிந்திருக்கிறது.கச்சா எண்ணெய் விலை குறைவைப் பயன்படுத்தி, மத்திய அரசு கடந்த மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை இரு முறை உயர்த்தியது. இதனால், அரசுக்கு நடப்பு நிதியாண்டில் 9,900 கோடி ரூபாயும், அடுத்த நிதி ஆண்டில், சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாயும் வருமானம் கிடைக்கும் என்று கணைக்கிடப்பட்டிருக்கிறது. இத்துடன், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு, ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை குறைந்து, அதற்கான மானிய செலவுகளும் குறையும். இது, அரசாங்க வரவு - செலவு விரிசலைக் குறைக்கப் பெரிதும் உதவும்.அதே சமயம், எண்ணெய் வள நாடுகளின் பொருளாதார சுருக்கத்தால், அவற்றின் இறக்குமதி தேவைகள் குறையும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால், இந்தியா போன்ற நாடுகளின் ஏற்றுமதி வியாபாரம் பாதிக்கப்படும் அபாயமும் காத்து நிற்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறையும் காலத்தை இந்திய அரசு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டியது மிக அவசியமாகும். நிலைமை மாறுவதற்குள், பெட்ரோலிய துறையில் நீண்ட கால சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படவேண்டும். இந்த சீர்திருத்தங்களில் ஒன்று, கச்சா எண்ணெய்க்கான சேமிப்புக் கிடங்குகளை உருவாக்குவதாகும்.2004-ஆம் ஆண்டில், இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டாலும், கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீடுகள் அரசால் ஒதுக்கப்படவில்லை. இம்மாதிரியான சேமிப்புகளால், கச்சாய் எண்ணெய் விலை உயரும்போது ஏற்படும் பொருளாதார அதிர்வுகளைப் படிப்படியாக எதிர்கொள்ளும் வலிமை கிடைக்கும். கச்சா எண்ணெயின் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி, இறக்குமதியைக் குறைப்பதற்குத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.எதிர்பாராத இம்மாதிரி உலக சந்தை நிகழ்வுகள், இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு தாற்காலிக ஆறுதல்தான். உள்நாட்டு தொழில் உற்பத்திக்கு சாதகமான, உள் கட்டமைப்பு வசதிகள் Infra structure facilities) மேம்படுத்தப்பட்டால்தான், இம்மாதிரியான நிகழ்வுகளின் பயன்களை, அடித்தட்டு மக்கள் வரை உணரமுடியும் என்பதில் சந்தேகமில்லை.