Thursday, April 14, 2016

நிறுத்தற்குறிகள் அறிவோம்...!!!

நிறுத்தற்குறிகள் அறிவோம்...!!!
1. காற்புள்ளி (,)
2. அரைப்புள்ளி( ; )
3. முக்காற்புள்ளி (:)
4. முற்றுப்புள்ளி ( . )
5. வினாக்குறி (?)
6. உணர்ச்சிக்குறி (!)
7. இடையீட்டுக்குறி ( – )
8. பிறைக்குறி அல்லது அடைப்புக்குறி ( () )
9. ஒற்றை மேற்கோள்குறி (' ')
10.இரட்டை மேற்கோள்குறி (" ")
11. விழுக்காடு குறி (%)
12. விண்மீன் குறி (*)
13. வலம் சாய்க்கோடு (/)
14. இடம் சாய்க்கோடு (\) 15.கொத்துக்குறி(#)
16. தொப்பிக்குறி(^)
காற்புள்ளி
1)   பொருட்களைத் தனித்தனியே கூறும்போது காற்புள்ளி இடவேண்டும்.
அ) தாய், தந்தை, தமையன், தங்கை என்னும் நால்வர் வீட்டில் உள்ளனர்.
ஆ) நான் வங்கிக்குச் சென்று, பணத்தை எடுத்து, பின்பு கடையில் சில பொருட்கள வாங்கிக் கொண்டு, வரும்வழியில் கோவிலுக்கும் சென்றுவந்தேன்.
இ) ஆடுகள், மாடுகள், நாய்கள், கோழிகள் ஊரில் வாழ்கின்றன.
2)          விளிப்பெயர்களை அடுத்து, காற்புள்ளி இடவேண்டும்.
அ) ஆருயிர்த் தந்தையே, வணக்கம்
ஆ) இன்பத்திலும், துன்பத்திலும் இணைபிரியா நண்பரே, வருக.
3) வினை எச்சத்திற்குப்பின் பொருள் விளக்கத்தைக் கருதி, காற்புள்ளி இடவேண்டும்.
அ) கண்ணன் அண்ணனைப் பார்த்து, ' உங்கள் வரவை நெடுநேரம் எதிர்பார்த்து நிற்கின்றேன்' என்றான்.
ஆ) ஒருவன் நன்றாகப் படித்து முடித்தபின், பரீட்சைக்குப் பயப்படமாட்டான்.
4) இணைமொழிகளுக்கு இடையில் காற்புள்ளி இடவேண்டும்.
அ) மேலோர் கீழோர், அரசன் ஆண்டி என்ற பாகுபாடு காலனிடம் இல்லை.
5) ஆனால்,ஆயின், ஆகையால், எனவேபோன்ற சொற்களுக்கு முன் காற்புள்ளி அவசியம்.
அ) கந்தன் மிக நல்லவன் ; ஆனால் , அவன் படிப்பில் குறைந்தவன்.
ஆ) வள்ளுவர் மிகச் சிறந்த ஞானியே; ஆனால் அவர் தம்மை உலகிற்கு அறிவிக்காமல் போனது பெருங்குறையே.
இ) இளமையில் கல்வி சிலையில் எழுத்து; ஆகையால், சிறுவயது தொட்டே சிரத்தையுடன் கல்விகற்கவேண்டும்.
அரைப்புள்ளி
1) பல செயல்களைக் குறிக்கும் ஓர் எழுவாய் வரும்போது அரைப்புள்ளி இடவேண்டும்.
அ) கோவலன் கொலையுண்டதைக் கேட்ட கண்ணகி எழுந்தாள் மதுரை மாநகர் வீதி வழியே சென்றாள் ; அரண்மனை வாயிலை அடைந்தாள் ; காவலனிடம் தன் கருத்தை விளக்கினாள் ; அரசன் ஆணையால் அவனைக் கண்டாள்.
ஆ) பண்டை இலக்கியங்கள் அனைத்தும் சிறந்தனவே; ஆனால், அவை எளிய நடையில் அமைந்தன என்று கூறல் இயலாது.
முக்காற் புள்ளி
1)சொற்றொடரில் கூறிய ஒன்றை விரித்துக் கூறும்போது முக்காற்புள்ளி இடவேண்டும்.
அ) பால் ஐந்து வகைப்படும்: ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால்,பலவின்பால் என்பன.
ஆ) பொருள் கூறுக: கோன், மஞ்சு, குஞ்சரம்.
இ) முத்தமிழ்: இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்.
முற்றுப்புள்ளி
1)சொற்றொடர்கள் பொருளால் முற்றுப்பெற்றல் என்பதை அறிவிக்க முற்றுப்பெறல் என்பதை அறிவிக்க முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.
அ) அன்பும் பண்பும் அமைந்ததே இல்வாழ்க்கை.
ஆ) நான் நேற்று என் பிறந்தநாளைக் கொண்டாடினேன்.
2) சொற்குறுக்கத்தையும் (திரு.) பெயர்க்குறுக்கத்தையும் (ம.ப.பா.) அறிவிக்க முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.
வினாக்குறி
வினாப்பொருளைத் தரும் சொற்றொடர்களுக்குப் பின் வினாக்குறி இடுதல் வேண்டும்.
உணர்ச்சிக்குறி
1)மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் போன்ற உணர்ச்சி உரைகளுக்குப் பின் உணர்ச்சிக்குறி இடுதல் வேண்டும்.
அ) போட்டியில்  எனது நண்பர் வென்றுவிட்டார்!  (மகிழ்ச்சி)
ஆ) எனது உறவினர் ஒருவருடன் இப்பொழுததான் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தேன். அதற்குள் அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்துவிட்டதே! (வியப்பு)
இ) கொடியவன் ! கொடியவன் ! (அச்சம்)
இடையீட்டுக் குறி     (          )      ]
ஒரு சொற்றொடரின் இடையில் கருத்தை நன்கு விளக்கும் பொருட்டு, அச் சொற்றொடருடன் தொடர்புற்ற தனிக்கூற்றுச் சொற்களை அடக்கி எழுதும்போது, அவ்வாறு அடங்கி இருப்பதைக் காட்ட, அத் தனிக்கூற்றின் இருபக்கங்களிலும், இவ்வாறு சிறுகோடு அல்லது பிறைக்குறி, அல்லது பகர வளைவுக்குறி இடுதல் வேண்டும்.
அ) திருக்குறள் தமிழகத்திற்கு (ஏன் உலகத்திற்கே) பெருமை தேடித்தருகின்றது.
ஆ) சிற்றம்பலத்திற்கு இன்றோடு பன்னிரண்டு அகவை (ஆண்டு) நிறைவுற்றது.
இ) இயற்கைப் பண்பாட்டோடு வாழ்கின்றவர், உலகத்தையே பரிசாகக் கொடுத்தாலும் ஒழுக்கத்தினின்று தவறமாட்டார்.
பிறைக்குறி
மொழிபெயர்க்கும் போதும், அருஞ்சொற்பொருளை விளக்கும்போதும், சிறுபிரிவுகளை எண்ணிக்கொண்டு வரும்போதும், பிறைக்குறி இடவேண்டும். இக்குறியை இடைப்பிறவரல் என்றும் கூறுவர்.
அ) பேச்சுத்திறன் (oratory) மாணவரிடம் இருத்தல் வேண்டும்.
இரட்டை மேற்கோள் குறி
பொன்மொழிகளை மேற்கோளாகக் காட்டும்போதும், நேர்கூற்றிற்கு முன்னும் முடிவிலும், இரட்டை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.
'அறஞ்செய்ய விரும்பு' என்று ஒளவையார் கூறியுள்ளார்.
ஒற்றை மேற்கோள் குறி
இரட்டை மேற்கோள் குறிகளுக்கு இடையில் மேற்கோள் வரும்போது ஒற்றை மேற்கோள் குறி
இடுதல் வேண்டும். எழுத்துக்களையோ சொல்லையோ, ஒருவர் கருத்தில் சிறு பகுதியையோ எடுத்தாளும்போது ஒற்றை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.
(அ)  ', , '    –  இவை மூன்றும் சுட்டெழுத்துக்கள்.

No comments: